கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றாவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கின. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படை பல்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டடங்கள் வீடுகள் இடிந்தன, மரங்கள் வேருடன் சாய்ந்தன. இவற்றில் வாகனங்கள் சிக்கி நொறுக்கின. மும்பை தவிர தானே, பால்கர், ரயாகாட், ரத்தனகிரி, கோலபூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பலத்த மழையால் சேதத்தை சந்தித்தன. கோலபா பகுதியில் காலை 331 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இது கடந்த 1974 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பெய்த மழையை விட அதிகம் ஆகும். இந்நிலையில் முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். சாய்ந்த மரங்கள் மற்றும் இடிபாடுகளை உடனடியாக அகற்றும்படி உத்தரவிட்டார். இதேபோல கோலாப்பூர், பஞ்சகங்கா, ரத்தனகிரி, கோடாவிலி, ரயாகாட,குண்டாலிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கையாக செயல்படவும் முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மும்பை, தானே, பால்கரில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.