Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் ஜோடி கோயிலில் தூக்கிட்டு தற்கொலை… வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்ததால் விபரீத முடிவு..!!

அரசுக் கல்லூரியில் படித்து வந்த காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயிருக்கும் ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பாஸ்குமார்.. வயது 20 ஆகிறது.. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா.. இவருக்கு வயது 19 ஆகிறது. இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே இருக்கும்  அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயின்று வந்தனர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் சொல்லி விட்டு சென்ற பாஸ்குமார் இரவு வரை வீடு திரும்பவில்லை.. இதனால் அந்த பகுதி முழுவதும் பெற்றோர் தேடிப்பார்த்தனர். அதேபோல நேற்று முன்தினம் மாலை முதல் வீட்டிலிருந்து வெளியில் சென்ற கவிதாவும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோரும் மகளை பல இடங்களில் தேடினர்.

இதற்கிடையே, ஈரியூர் காட்டு கொட்டாய் வனப்பகுதியை ஒட்டியிருக்கும் அருஞ்சோலை அம்மன் கோயிலில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து சடலமாக கிடப்பதாக கீழ்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விவசாயிகள் தகவல்கொடுத்தனர்.. இதையடுத்து, தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |