மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கோரி தமிழகத்தில் உள்ள 400 நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி புதிய கட்டணம் இந்த ஆண்டு நினைக்கப்பட வேண்டிய நிலையில் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் உள்ளார். ஏற்கனவே கல்லூரிகளில் தரத்தைப் பொருத்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கல்லூரி கட்டணம் தொடர்பாக பரிந்துரைகளை அனுப்பலாம் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டனர்.
அதன்படி 400 நூற்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஊழியர்களின் சம்பளம், கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, நவீன மேம்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த பட்சமாக 5 சதவிகிதம் முதல் அதிகபட்சமாக 25 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்த கல்லூரிகள் கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் மாணவர்களின் கல்வி கட்டணம் 10,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.