இங்கிலாந்தில் தனது காதலிக்கு வித்தியாசமாக ப்ரப்போஸ் பண்ணுவதற்கு செய்யப்பட்ட ஏற்பாட்டினால் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இங்கிலாந்து நாட்டின் தெற்கு யார்க்ஷ்ரின் மாகாணத்தின் அபேடெலி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரின் நெடுநாள் தோழியான ரியாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காதலித்து வந்துள்ளார். இதனால், அவர் தனது காதலியிடம் காதலை சொல்ல வேண்டும் என எண்ணி, தனது காதலி ரியாவுக்கு சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு, நேற்று இரவு அவருடைய வீட்டை பூக்களால் அலங்காரித்து வீடு முழுவதும் அழகு படுத்தி மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துள்ளார். தனது காதலி வந்து பார்க்கும்போது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கவேண்டும் என நினைத்து, அந்த அதிர்ச்சியோடு அவரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த வேண்டுமெனறு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு அலுவலகத்திற்கு சென்று ரியாவை அழைத்துவர தனது வீட்டில் இருந்து மார்க் காரில் சென்றுள்ளார். மார்க் சென்ற சில நிமிடங்களில் அவர் ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகளில் ஒன்று வீட்டில் இருந்த துணியில் விழுந்து, வீட்டில் தீப்பற்றிக்கொண்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அலுவலகத்தில் இருந்த தனது காதலி ரியாவை காரில் அழைத்துக்கொண்டு மார்க் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு அவரது வீடு தீப்பற்றி எரிவதையும், அதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்வதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
ஆனாலும், மார்க் சற்றும் மனம் தளரவிடாமல் பற்றிஎரிந்து கொண்டிருக்கும் தனது வீட்டிற்கு வெளியே வைத்து தனது காதலி ரியாவிடம் தன்னுடைய காதலை வெளிக்காட்டும் விதத்தில் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார். மார்க்கின் வீடு ஒருபுறம் எரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு லவ் ப்ரபோஸ் செய்ததை கண்டு ஆச்சரியமடைந்த ரியா ஒரு நிமிடம் என்ன செய்வதென்று அறியாமல் அப்படியே திகைத்துபோய் நின்றார். அதன் பின் அடுத்த சில வினாடிகளில் மார்க் செய்த அந்த லவ் ப்ரப்போசலை ஏற்றுக்கொண்ட ரியா தானும் காதலிப்பதாக தெரிவித்து விட்டார். அதன்பின் இருவரும் மகிழ்ச்சியில் இருக்க, மறுபக்கம் வீட்டில் எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்துவிட்டனர்.
அதன்பின் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த தகவலை தெற்கு யார்க்ஷ்ரின் மாகாண தீயணைப்புத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. காதலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட யார்க்ஷ்ரின் தீயணைப்புத்துறை, ” திருமண அழைப்பிதலை மார்க், ரியா தங்களிடம் வந்து கொடுப்பார்கள் என நம்புகிறோம்” எனவும் பதிவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூகவலைதளத்தில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்திய ஒரு நபர் ‘மார்க்கை திருமண ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்காதீர்கள்’ என கிண்டலாக கூறியிருந்தார்.