விளையாட்டு காரணமாக ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னயப்பா. இவருக்கு 22 வயதான சுனில் என்ற ஒரு மகன் இருக்கிறார். சுனில் கர்நாடக மாநிலத்தில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கொத்தப்பள்ளியை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே கைப்பந்து விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்ற 28ஆம் தேதி சுனிலுக்கும் நவீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் நவீன் தரப்பில் கொடியாளம் பகுதியை சேர்ந்த 19 வயதான ஜனார்த்தனன் என்பவர் மூலமாக சுனிலை கொத்தப்பள்ளியில் உள்ள தனியார் லேஅவுட்டிற்கு கூட்டி வந்துள்ளனர். அதன்பின் நவீன், ஜனார்த்தனன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த 28 வயதான அனில் ஆகிய 3 பேரும் சேர்ந்து சுனிலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுனில் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுனில் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சுனிலின் இரு கால்கள் அகற்றப்பட்ட நிலையில் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாகலூர் போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நவீன், அனில், ஜனார்த்தனன் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து, அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர். இதனிடையே கொடியாளம், கொத்தப்பள்ளி பகுதியில் மோதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் அருகே விளையாட்டு காரணமாக ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.