சிறு ஓட்டையை வெல்டிங் கொண்டு அடைக்க முற்பட்டதால் துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட்டிங் துறைமுகத்தில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மொத்த நகரமும் புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் உள்ள பல்வேறு கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்துள்ளன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து இருக்கிறது. மிக சக்திவாய்ந்த இந்த வெடி விபத்தால் சாலையில் நடந்து சென்ற மக்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த நிலையில், இந்த வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்ததாகவும், 3,700 பேர் காயம் அடைந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த வெடி விபத்திற்கு குடோனில் வைக்கப்பட்டிருந்த 2,500 டன் அமோனியம் நைட்ரேட் தான் காரணம் என்று லெபனான் பிரதமர் கூறியுள்ளார். அதன் பின்னர் வெளியான தகவலில், 2500 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கின்ற குடோனில் சிறு ஓட்டை ஏற்பட்டுள்ளதாகவும் அதன் வழியாக திருடர்கள் நுழைந்து விடலாம் என்பதால் வெல்டிங் வைத்து அதனை அடைத்திருக்கின்றனர். அச்சமயத்தில் தீப்பொறி பறந்ததால் இந்த கொடூரமான வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.