வேலூர் அருகே கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆலம்பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவரது மனைவி யுவராணி. கூலி வேலை செய்து வருகிறார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை. இந்த நிலையில், ரஞ்சன் நேற்றைய தினம் காலை சுமார் 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கு குடியாத்தம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே சென்று, பெட்ரோல் நிரப்பி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பும்போது பாலத்திற்கு அடியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
முதல் தண்டவாளத்தை பாதுகாப்புடன் வண்டியைத் தள்ளிக் கொண்டு கடந்த அவர், இரண்டாவது தண்டவாளத்தை கடக்கும் போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி ரயில் இன்ஜின்கள் ஒன்றாக வேகமாக வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்ளாமல், வாகனத்தை காப்பாற்ற நினைத்து அதை மேல் நோக்கி நிமிர்த்தி தண்டவாளத்தை விட்டு வெளியேற்ற முயற்சித்துள்ளார்.
ஆனால் நொடிப்பொழுதில் அவர் அருகில் வந்த ரயில் என்ஜின் அவர் மீது மோத அவர் 100 அடி தூரத்திற்கு வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வாகனம் 200 அடி தூரத்திற்கு மேல் சிறு சிறு பாகங்களாக சிதறி ஆங்காங்கே கிடந்தன. பின் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.