கொரோனாவில் இரண்டாவது அலை தொடங்குவது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,241 ஆகவும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சென்ற ராதாகிருஷ்ணன், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு மற்றும் குடிநீர் வசதிகள் பற்றி ஆய்வு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார துறையினருடன் ஆலோசனை நடத்தினார்கள். அதன் பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் தினம் தோறும் 60000 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் பத்தாயிரம் கொரோனா மருத்துவ படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து தற்போது குறைந்து கொண்டு வருகிறது. அதனால் நாம் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
கொரோனாவின் அடுத்த அலையை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை நம்மால் கட்டுப்படுத்த இயலும் என்று வலியுறுத்தினார். மேலும் கொரோனாவால் தமிழகத்தில் மட்டும்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழக்கிறார்கள் என்கின்ற ஐஎம்ஏவின் அறிக்கை அரசு அளித்தது இல்லை. இந்திய மருந்து ஆராய்ச்சி கவுன்சில் அளிப்பது மட்டுமே அதிகாரப்பூர்வமான அறிக்கை” என விளக்கம் அளித்துள்ளார்.