முழு கல்வி கட்டணமும் செலுத்த வேண்டும் என்று கூறும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் சென்ற மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களிடம் வற்புறுத்தி வருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் தனியார் பள்ளிகள் சார்பாக நீதிமன்றத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களிடம் இருந்து 40 சதவீதம் கல்விக் கட்டணத்தை வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளனர். இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
அக்கடிதத்தில், கொரோனா ஊரடங்கில் தனியார் பள்ளிகள் அனைத்தும் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டணத்தை செலுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வற்புறுத்தக் கூடாது. இதுதொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல தனியார் பள்ளிகள் அந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், தனியார் பள்ளிகள் கட்டணத்தை மூன்று தவணைகளாக வசூல் செய்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஒரு சில பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மீறி 100 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து சென்ற ஜூலை 31-ஆம் தேதி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், அரசு உத்தரவை மீறி 100 சதவீதம் கட்டணம் செலுத்த கோரும் பள்ளிகள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் அதன் அறிக்கையை வருகின்ற ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தரவை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகள் பற்றிய அறிக்கையை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை மீறி 100 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பள்ளிகளின் மீது முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை பற்றிய விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.