கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் சிரிய அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவளித்து வருகிறது. அதே போல் சிரிய நாட்டு படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப், அலிப்போ, ஹமா உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்ற வேண்டுமென்று அரசு ஆதரவு படைகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலரும் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லடஹியா மாகாணத்தில் அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் அரசு படையைச் சேர்ந்த 12 பேரும், கிளர்ச்சியாளர் படையைச் சேர்ந்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர். 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.