கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலமாக முட்டை வழங்க வேண்டும், மாணவர்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்க வேண்டும், சத்துணவுத் திட்டத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சுதா என்பர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் கடந்த வாரம் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களுக்கு சத்தான உணவுகள் முட்டைகளை வழங்க வேண்டியது அவசியம் என்றும், தேவைப்படும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்கள்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது… ஏற்கனவே ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அனைவருக்கும் சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது சாத்தியமில்லை. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்றால் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? என்று கேள்வி எழுப்பபட்டது. அப்போது அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டதால் இந்த வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் மட்டுமே அரசுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.