400 தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் இதனை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் இயக்கத்திடம் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் கைது செய்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து பயங்கரவாத அமைப்பு தாங்கள் கைது செய்து வைத்திருந்த ஆயிரம் பிணைக் கைதிகளை விடுதலை செய்துவிட்டதாக தெரிவித்தது. அதோடு சிறையில் மீதம் இருக்கும் 400 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடூர குற்றங்கள் புரிந்து சிறையில் இருப்பவர்களை ஒருபோதும் விடுவிக்க முடியாது அவர்களை மன்னிப்பதற்கு அதிகாரம் என்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் எந்த ஒரு தாக்குதல் நடத்த மாட்டோம் என பயங்கரவாத அமைப்பு அறிவித்திருந்த நிலையில் அதிபரின் பேச்சு அவர்களுக்கு கோபத்தை கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஜலாலாபாத் சிறைச்சாலையின் நுழைவுவாயிலில் தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டான். அதில் ஒருவர் பலியாகி 18 பேர் பலத்த காயமடைந்தனர் மேலும் இச்சம்பவத்தின் போது பயங்கரவாதிகள் மேல்தளத்தில் இருந்துள்ளனர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உடனடியாக பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது