மங்களூருவில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்தனர்.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தற்போது வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும். ஐபிஎல்லில் ஒவ்வொரு வருடமும் சூதாட்ட புகார் எழுந்து கொண்டே தான் வருகிறது. போலீசாரும் சோதனை செய்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மங்களூரு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி விரைந்து சென்று அப்பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனையின் போது அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 5 செல்போன்களும், ரூ.4.20 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது . ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கி சில நாட்களே நடந்து வரும் நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.