மதுபோதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. வன்முறையில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்கள் குழுவை ஒடுக்குவதற்கும் மக்களின் பாதுகாப்புக்காகவும் அந்நாட்டின் பல இடங்களில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள சங் நகரில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மது போதையில் வந்ததோடு தான் வைத்திருந்த துப்பாக்கியால் சாலை மற்றும் குடியிருப்புகளில் நின்று கொண்டிருந்த அப்பாவி மக்களை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.
இதனை சிறிதும் எதிர்பார்க்காத மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள தெறித்து ஓடினர். ஆனாலும் இத்தகைய எதிர்பாராத துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் தலைமறைவான ராணுவ வீரரை தேடி வருகின்றனர். மேலும் இத்தகைய காரணமற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சங் நகரத்தில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.