Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமுகை வனப்பகுதியில்… “7 மாதங்களில் 16 யானைகள் மரணம்”… காரணங்களை கண்டறிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்…!!

சிறுமுகை வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வரும் காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை வனக் கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உள்பட்ட நெல்லிமலை காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வாயில் அடிபட்ட நிலையில் படுத்துகிடந்த 11 வயது ஆண் யானைக்கு வனத் துறை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் மதியம் முதல் இரவு வரை சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்த ஆண் யானை உயிரிழந்து விட்டது. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனத் துறை மற்றும் கால் நடைத்துறை மருத்துவர்கள் ஆகியோர் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.

அதில் யானையின் வாய் பகுதியில் 20 சென்டி மீட்டர் ஆழத்திற்கும் 9 சென்டி மீட்டர் விட்டத்திற்கு காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், “இரண்டு யானைகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் மற்றொரு யானையின் தந்தம் குத்தியதில் இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம்.இதனால், வாய்ப் பகுதியில் சீழ்பிடித்து, யானை உணவு உட்கொள்ள முடியாமல் சுற்றி வந்துள்ளது. மேலும், அதன் வயிற்றுப் பகுதிகள் ஆய்வு செய்யப்படும். யானை உயிரிழப்பிற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்த உள்ளோம்” என்று கூறினார்.

உயிரிழந்த பெரும்பாலான யானைகள் வயிற்றுப் பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டறிய வனப் பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி, நீர்நிலைகளில் ஆய்வுக்காக மாதிரிகள் சேகரிக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் யானைகள் உட்கொள்ளக் கூடிய தாவரங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கோவை வனக் கோட்டத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 16 யானைகள் இதுவரை உயிரிழந்துள்ளன.

யானைகளின் உயிரிழப்பிற்கான காரணத்தை கண்டறிய தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நேரச், தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு உயர் மட்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டு யானைகளின் தொடர் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிந்து, ஆறு மாதத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். ஆனால் இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும், இன்னும் இந்தக் குழு தனது ஆய்வை தொடங்கவில்லை. அதனால் உடனடியாக இக்குழுவினர் ஆய்வுகளைத் தொடங்கி, யானைகள் உயிரிழப்பிற்கான காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |