ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை மரணம் தொடர்பாக பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக் கோரி நடிகை ரியா சக்ரபோத்தி தொடர்ந்த வழக்கில் பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் வழக்கறிஞர் முகுஸ் ரோத்தகி தொடர்பு இருப்பதாக பீகார் அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தின் பின்னணியில் ஹிந்தி திரையுலகில் செல்வாக்கு மிக்க சில குடும்பங்களை சேர்ந்தவர்கள் இருப்பதாக பிரபல நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். இதனிடையே சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ணா குமார் சிங் தனது மகன் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்ரபோத்தியிடம் புலன் விசாரணை நடத்தக்கோரி பாட்னா போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தன் மீது பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புகாரை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் நடிகை ரியா சக்ரபோத்தி தாக்கல் செய்தார். இந்தமனு தொடர்பாக தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. பொதுவாக மற்றொரு மாநிலத்திற்கு விசாரணைக்கு செல்லும்போது அம்மாநில போலீசார் ஒத்துழைப்பு தருவார்கள் எனவும் ஆனால் இவ்வழக்கில் மும்பை போலீசாரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை எனவும் பீகார் அரசு வழக்கறிஞர் லலீத் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.இவ்விவகாரத்தில் பிரபல வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தொடர்பு இருப்பதாகவும் லலீத் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.