சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 70 (62) ரன்கள் குவித்தார். மேலும் விஜய் சங்கர் 26, மனிஷ் பாண்டே 19, தீபக் ஹூடா 14, முகமது நபி 12, ஜானி பேர்ஸ்டோ 1 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக முஜீப், முகமது சமி, அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்லும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். அதன் பின் கிறிஸ் கெய்ல் 16 ரன்களில் ரஷித் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் , கே.எல்ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் கணிசமாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் அரைசதம் கடந்தார். அதன் பின் அரைசதம் கடந்த மயங்க் அகர்வால் 55 (43)ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த டேவிட் மில்லர் 1 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து மன்தீப் சிங் களமிறங்கினார். கடைசி 2 ஓவரில் பஞ்சாப் அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய சித்தார்த் கவுல் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மன்தீப் சிங் 2 (3 ) விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பின் சாம் கர்ரன் களமிறங்க, கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட பரபரப்பான நிலையில் 11 ரன்கள் எடுத்தது. இதனால் 19. 5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கேஎல் ராகுல் 71 (53) ரன்களிலும், சாம் கர்ரன் 5 (3) ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளும், ரஷித் கான், சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.