N95 மாஸ்க்கில் வால்வு பொருந்தியதை பயன்படுத்தக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை கூறியது ஏன் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மாஸ்க் அணிந்து வெளியே வருவது என்பது முக்கிய செயல்முறையாக உள்ளது. முதலில் நாம் ஏன் மாஸ்க் அணிய வேண்டும். எப்படிப்பட்ட மாஸ்க் அணிய வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண மெடிக்கல் மாஸ்க்கை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும் சரி உபயோகிக்கலாம்.
அதற்கான காரணம் எந்த மாஸ்க் அணிந்திருந்தாலும் நாம் பேசும் போது, இருமும் போது, தும்மும் போது வெளியாகக் கூடிய எச்சில் துளிகள் காற்றில் கலந்து அதன் மூலம் யாருக்கும் கொரோனா பரவாமல் அது தடுக்கும். இதற்கு சாதாரண மாஸ்க் கூட போதுமானது. ஆனால் பெரும்பாலானோருக்கு n95 என்ற மாஸ்கின் மீது ஒரு மோகம் வந்துள்ளது. இதனை போட்டால் தான் நமக்கு கொரோனா பரவாது என்று பலரும் நம்புகின்றனர். உண்மை எதுவெனில், சாதாரணமா மாஸ்க் கூட முறையான சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் நமக்கு கொரோனா வராமல் தடுக்கும்.
N95 மாஸ்க் சாதாரண மாஸ்க்கை விட அனைத்து வகையான வைரஸ்களையும் பில்டர் செய்து நமது மூக்கு மற்றும் வாய் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுக்கக் கூடியது தான். ஆனால் அனைவரும் இந்த மாஸ்க்குகளை வாங்க தொடங்கிவிட்டால், நோயாளிகளுடன் மிக நெருக்கமாக பழகி அவடகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு இந்த மாஸ் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்.எனவே நம் அனைவருக்கும் சாதாரணமான மாஸ்க்குகள் போதுமானது. இந்த N95 மாஸ்க்குகளில் வால்வு பொருந்திய மாஸ்க்குகளை பயன்படுத்தக்கூடாது என மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியது.

அது ஏனென்றால், n95 பெயரிலையே விளக்கம் உள்ளது. இது 95 சதவிகித கிருமிகளை தரமாக பில்டர் செய்து அதன் பிறகே காற்றை உள்ளே அனுப்பக் கூடியது. இதுதான் n95 மாஸ்க்கின் வேலை. இந்த N95 மாஸ்க் மூக்கு, வாய் உள்ளிட்ட பகுதிகளை முற்றிலும் சூழ்ந்து இருப்பதால், நாம் உள்ளிழுக்கும் காற்று சுத்தமான காற்றாக வரும். ஆனால் வெளியே அந்த மூச்சுக் காற்றை வெளியிடும்போது மாஸ்க்கின் உள்பகுதியில் ஏராளமான கார்பன் டை ஆக்சைடுகள் படிந்து இருக்கலாம். அதன் மூலம் நமக்கு மூச்சு திணறல் ஏற்படலாம் மற்றும் அந்த முக கவசத்தை நீண்ட நேரம் பயன்படுத்துவது கடினமாக இருக்கும்.
இதற்காகத்தான் N95 மாஸ்க்கில் வால்வு பொருந்திய அமைப்பை வைத்தனர். இதனால் என்னவாகும் எனில், அந்த வால்வு மூலமாக நாம் உள்ளிழுக்கும் காற்று சுத்தமான காற்றாக உள்ளே வரலாம். ஆனால் வெளியே விடும் காற்றானது பில்டர் செய்யாமல் அப்படியே வெளியேற்றி விடும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இந்த வால்வு பொருந்திய மாஸ்க்கை பயன்படுத்துகிறார் எனில், அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ அவர் மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்பி கொண்டிருப்பதாக அர்த்தம்.
ஏனெனில், அவர் தனது மூச்சுக் காற்றை வெளியிடும்போது, இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அந்த வால்வு வழியாக கொரோனா வைரஸ் வெளியேறி காற்றில் கலந்து மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாகவே இந்த மாஸ்க்கை பயன்படுத்தக்கூடாது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது. அதேபோல் இந்த N95 மாஸ்க்குகளை பயன்படுத்துபவர்கள் சாதாரணமாக மாஸ்க்குகளை கழுவி உபயோகிப்பது போல், இதையும் சோப்பு அல்லது ஹாட் வாட்டரில் கழுவி உபயோகித்தால் அதற்கான பயன்கள் மறைந்து அதுவும் சாதாரணமாக மாஸ்க் போல் மாறிவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.