இந்திய தொழிலாளர்கள் ஐந்து மாதங்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்று காரணத்தால் உலகம் முழுவதும் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியை நிறுத்தியுள்ளன. அதனால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைப் பார்க்க சென்றிருந்த இந்திய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி இருக்கின்றனர். இத்தகைய நிலையில் குவைத்திற்கு வேலை பார்க்கச் சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் கடந்த 5 மாதங்களாக வருமானமின்றி உணவு, குடிநீர், தங்குமிடம் போன்றவற்றிற்கு மிகவும் அவதிப்படுவதாக வாட்ஸ்அப் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், “இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 88 தொழிலாளர்கள் ஒரே இடத்தில் தங்கி இருக்கின்றோம். சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லை. கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இத்தகைய சூழலில் நிறுவனங்கள் சார்பாக எத்தகைய உதவியும் செய்யப்படவில்லை. எங்கள் அனைவரையும் தாயகம் அழைத்துச் செல்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொழிலாளர்கள் அனைவரும் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளஇந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.