பெங்களூருவில் நோயாளிகளிடம் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக வசூலித்த ரூபாய் 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை ஐபிஎஸ் அதிகாரி நோயாளிகளிடமே திருப்பி மீட்டுக் கொடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் என பலரும் அயராது உழைத்துவரும் இந்த சூழ்நிலையில், மருத்துவர்களின் பங்கு இதில் கூடுதலாகவே இருக்கிறது.
மருத்துவர்களை மக்கள் மலைபோல் நம்பி இருக்கும் இந்த சூழ்நிலையில், ஒரு சில மருத்துவர்கள் பணத்திற்காக செய்யும் தவறான செயல்களால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் கலங்கப்படுத்தபட்டுவிடுகிறது. அந்த வகையில், பெங்களூருவில் உள்ள பிரபல SSMNS மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து கொரோனா சிகிச்சைக்காக ரூபாய் 50,000 முதல் ரூபாய் 3 லட்சம் வரை சிகிச்சைக்காக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்துள்ளது.
இது கர்நாடக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம். இதனை அறிந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா என்பவர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று விசாரித்து, மருத்துவமனை நிர்வாகம் 22 பேரிடம் கூடுதலாக வசூலித்த ரூபாய் 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை நோயாளிகளுக்கு திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு சமூகவலைதளத்தில் ஆஹா இவரல்லவா போலீஸ் அதிகாரி என்று மக்கள் தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.