சென்னையில் தொடர்ந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் ஆர்.கே மடம் சாலையில் சென்ற பத்தாம் தேதியன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ,இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து கொண்டு வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் கழுத்தில் அப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்கள்.இதனைத் தொடர்ந்து அந்த பெண் உடனடியாக அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தார்கள். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை கைப்பற்றினர். இருந்தாலும் அந்தப் பதிவையும் எத்தகைய விபரங்களும் கிடைக்கவில்லை. அதனைப் போலவே இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து சென்ற கொள்ளையர்கள் செல்லும் ராஜா அண்ணாமலைபுரம் முதல் எண்ணூர் வரை இருக்கின்ற அனைத்து சிசிடிவி கேமராக்களையும் காவல்துறையினர் ஆராய்ந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெரும்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் கூட்டாளிகள் செயின் பறிப்பில் ஈடுபட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதை அடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட புளியந்தோப்பை சேர்ந்த அபி என்ற 21வயது நபரும், நசீர் என்ற 20 வயது நபரும், சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த அஜய் ராகுல் என்ற 20 வயது நபரும் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இரு பிரிவினராக பிரிந்து, சென்னையில் விடிய காலை நடைபயிற்சி செய்யும் பெண்கள் மற்றும் ஆட்டோ பேருந்துகளில் ஓரமாக அமர்ந்து செல்லக்கூடிய பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபடுவது வழக்கம். மேலும் மாதவரம், வில்லிவாக்கம், கீழ்பாக்கம், அபிராமபுரம் உட்பட்ட ஒன்பது இடங்களில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் எம்.கே.பி நகர், ராயபுரம், திருவேற்காடு போன்ற பல்வேறு இடங்களிலும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடுவதும் இந்த கும்பல் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் செயின் பறிப்பு இருசக்கர வாகனத் திருட்டு உட்பட்ட 13 க்கும் மேலான வழக்குகள் இவர்கள் மீது போடப்பட்டுள்ளன. அந்த கும்பலிடம் இருந்து 8 சவரன் தங்க நகை மற்றும் 8 இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். அதன் பின்னர் மூன்று நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.