ஜூலை 30ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு தான் பல கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் நிலையில், இதற்கான கால வரையறை வருகின்ற ஜூலை 31 உடன் முடிகிறது.
எனவே ஆகஸ்ட் 1முதல் மீண்டும் ஊரடங்கு 7 வது கட்டமாக அமல்படுத்தப்படுமா ?அல்லது ஊரடங்கு தளர்த்தப் படுமா ? என்பது குறித்து திட்டவட்டமாக தெரியவில்லை. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ வல்லுனர்களுடன் ஜூலை 30ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் கொரோனா நிலவரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் குழு கூறும் பரிந்துரையின்பேரில் ஊரடங்கு நீட்டிப்பு, பேருந்து இயக்குவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.