சூடான் நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர தாக்குதலால் 60 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கின்ற டார்பூர் பிராந்தியத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு இடையில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் சென்ற 2013ஆம் ஆண்டு அப்பகுதியில் சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சிக் குழுக்கள் உருவாகியுள்ளன. அச்சமயத்தில் தொடங்கிய வன்முறை தற்போது வரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு இடையே உள்ள பிரிவை பயன்படுத்தி அதன் மூலமாக கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, கால்நடைகளை திருடி செல்வது ஆகிய கொடூர சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் சென்ற சில வாரங்களாகவே டார்பூர் பிராந்தியத்தில் ஆயுதமேந்திய கும்பல்கள் இடையே மோதல் அதிகரித்ததால் அப்பகுதியில் கடந்த 13-ஆம் தேதி அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டார்பூர் பிராந்தியத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்ற ஒரு கிராமத்தில் ஆயுதமேந்திய கும்பல் புகுந்து கொடூரமான தாக்குதலை மேற்கொண்டனர். அத்தகைய தாக்குதலில் பெண் குழந்தைகள் உள்ளிட்ட 60க்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி 60 க்கும் மேலானோர் படுகாயமடைந்துள்ளனர். இத்தகைய தாக்குதலை தொடர்ந்து டார்பூர் பிராந்தியத்துக்கு அதிக படைகளை சூடான் அரசு அனுப்பி வைத்திருக்கின்றது.