மதுரையில் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த தமது மருமகளுக்கு 101 வகை உணவுடன் தலைவாழை விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார்.
மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் போல சண்டை இட்டுக் கொள்வதாக பலரும் கருதுவது உண்டு. ஆனால் மதுரையைச் சேர்ந்த அஹிலா என்பவர் மாமியார் மருமகள் உறவிற்கு புது இலக்கணம் ஒன்றை எழுதியிருக்கிறார். மூன்றும்மாவடியை சேர்ந்த அபுல்ஹாசனுக்கும் ஷப்னா என்ற பெண்ணுடன் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக புதுமண தம்பதிகள் உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே தனது மருமகளுக்கு பிரியாணி, ப்ரைடு ரைஸ், சப்பாத்தி, சிக்கன், மட்டன் ,மீன், குளிர்பானங்கள் என 101 வகை உணவு சமைத்து விருந்து தயார்செய்து மாமியார் அசத்தியிருக்கிறார். இதுகுறித்து அஹிலா கூறுகையில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் கடந்த வாரம் 50 நபர்களை வைத்து தனது மகனுக்கு சிறப்பான முறையில் இல்லத்தில் திருமணம் நடந்ததாகவும்,
ஊரடங்கு காரணமாக விருந்திற்கு அனுப்ப முடியாத சூழ்நிலையால் தனது மருமகளுக்கு 101 வகையான உணவுகளை வீட்டிலேயே சமைத்து விருந்து கொடுத்ததாவும் இதனால் தனது மருமகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மதுரையில் மருமகளுக்கு மாமியார் பிரம்மாண்ட விருந்து வைத்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக மருமகனுக்கு மட்டும் விருந்து என்கிற நிலையை மாற்றி மருமகளுக்கும் விருந்து படைக்கலாம் என்பதை உணர்த்தி வருகிறார்.