முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27இல் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அவர் மறைந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மத்திய அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலர் கலாம் நினைவிடத்தை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவை அடுத்து மார்ச் இறுதி வாரம் மூடப்பட்டது.
இன்று கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடம் வண்ண மின்விளக்குகளால் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. கலாமின் அண்ணன் குடும்பத்தினர் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளனர். அதனைத்தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். ஆனால் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படவில்லை.