ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று காலை பைக்கின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.. இந்த விசாணையில், அவர் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பதும், இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையிலுள்ள தனியார் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், இவர் நேற்று காலை ஏலகிரி மலைப்பகுதியிலிருந்து தன்னுடைய உறவினர்வீட்டுக்கு லத்தேரி நோக்கி சென்று கொண்டிருக்கும்போது மின்னூர் பகுதியில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற லாரி பைக்கின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது,. இதையடுத்து, விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.