சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கி விளையாடிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணிக்கு இது பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.
இந்நிலையில் தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:- “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்தோடு மீண்டும் களம் இறங்க வேண்டும். முதல் இடைவேளை நேரத்தின் போது இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் வரை குவித்தால் நல்ல இலக்காக இருக்கும் என்று கருதினோம். ஆனால் துரதிருஷ்டவசமாக நாங்கள் ரன்களை மிக குறைவாக எடுத்து விட்டோம். டாப் ஆர்டரில் யாரேனும் ஒரு வீரர் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி எங்கள் அணிக்கு ஒரு நல்ல பாடம். பந்து வீச்சில் நாங்கள் சிறப்பாக வீசி நெருக்கடி கொடுத்தது பாராட்டத்தக்கது” என்றார்.