மனைவியையும் மகளையும் நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு தனது காதலியுடன் நபர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
ஆந்திரா மாநிலம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்ற பெண் தனது 8 வயது மகளுடன் வந்து புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது கணவரான வெங்கடாஜலபதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் தன் கணவரை மீட்டுத் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது காதலி விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அவர் தனது காதலியுடன் செல்வதற்கு விரும்புவதாக தெரிவிக்க அவரது மனைவிக்கும் காதலிக்கும் இடையே பெரும் தகராறு உருவானது.
இதனையடுத்து காவல்துறையினர் மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் தனது கணவனை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்த சரஸ்வதி காவல் நிலையம் முன்பாக வெங்கடாஜலபதியிடம் கெஞ்சினார். அவர் மட்டுமல்லாது அவருடன் வந்திருந்த 8 வயது சிறுமியும் அப்பா அப்பா என வெங்கடாஜலபதியை பார்த்து கதறினார். ஆனால் அவரோ விட்டால் போதும் என்று தனது காதலியுடன் புறப்பட்டு செல்ல தயாராக இருந்தார்.
உறவினர்கள் சரஸ்வதியை பிரச்சனை வேண்டாம் என அமைதிப்படுத்திய நேரத்தில் வெங்கடாஜலபதி இதுதான் நேரம் என அங்கிருந்து வேகமாக தப்பினார். இதனையடுத்து சரஸ்வதி இரண்டு சக்கர வாகனத்தின் பின்னாலேயே ஓடி சென்று கையில் வைத்திருந்த செல்போனை தூக்கி எறிந்து நடு ரோட்டிலேயே கதறி அழுதார். தாயின் வேதனையை பார்த்த 8 வயது சிறுமி கோபம்கொண்டு தந்தையின் செல்போன் என்னை முதலில் அழித்துவிடு அவர் வேண்டாம் என கத்தினார். இது தொடர்பான காணொளி இணையதளத்தில் வைரலாக பலரும் வெங்கடாசலபதியை திட்டி வருகின்றனர்.