4 மாத குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை, இரு தரகர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் கொசுகான் என்ற பகுதியிலுள்ள டோண்டுலா மாண்டரியா கிராமத்தில் தினேஷ் பிரம்மா என்பவர் தன்னுடைய 4 மாத குழந்தையை பிரணிதா நர்சரி, ரீட்டா பிரம்மா ஆகிய தரகர்கள் முலம் கர்பி அங்லாங்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ரூ 45 ஆயிரத்திற்கு விற்றுள்ளார்..
இந்த சம்பவம் குறித்து அறிந்த கிராமத்தினர் கொசுகான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, நெடான் (NEDAN) அறக்கட்டளையின் தலைவர் திகம்பரும், கொசுகான் போலீசாரும் பெண் குழந்தையை தரகர் பிரணிதா நர்சரியிடமிருந்து மீட்டனர்..
இது பற்றி கோக்ராஜரின் நெடான் அறக்கட்டளையின் தலைவர் திகம்பர் கூறும்போது, “தினேஷ் பிரம்மா குஜராத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.. இருப்பினும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர் வீடு திரும்ப வேண்டியிருந்தது.. கடந்த சில மாதங்களாக அவர் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வந்துள்ளார்.. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் குழந்தையை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளபட்டுள்ளார்” எனக் கூறினார்.
இதையடுத்து, பிரிவு (யு / எஸ்) 370 ஐபிசியின் கீழ் கொசுகான் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எண் 99/20 பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தை விற்பனையில் ஈடுபட்டதற்காக குழந்தையின் தந்தை, 2 தரகர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.