டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இளைஞனை பரிசோதகர் கழுத்தை நெரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜெர்மனியில் 28 வயது இளைஞன் ஒருவன் தனது தோழியுடன் ட்ராம் ஒன்றில் டிக்கெட் எடுக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் பரிசோதகர் வந்த நேரம் அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ட்ராமை விட்டு உடனடியாக இறங்குமாறு பரிசோதகர் கேட்டுக்கொள்ள இளைஞனும் அவனது தோழியும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ட்ராமை விட்டு இறங்கியதும் இளைஞனுக்கும் பரிசோதகருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இளைஞனை கீழே தள்ளி பரிசோதகர் அவனது கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் எடுத்துக்கூறியும் அவர் கேட்காமல் இளைஞரின் கழுத்தை வெறியுடன் நெரித்துள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மன் பத்திரிக்கையின் ஊழியர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து ஆன்லைன் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞர் மீது டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றியது, தாக்கியது என பல வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் பத்திரிக்கை நிறுவன ஊழியர் எடுத்த வீடியோ விசாரணைக்கு உபயோகப்படுத்தப்பட்ட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இளைஞனின் கழுத்தை நெறித்த பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். வீடியோவில் காணப்படுவது போன்ற அத்துமீறல் எங்களைப் பொருத்தவரை ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.