திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசிக்க தடையில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதன்படி, கடந்த மே மாதம் இறுதி வரையிலும், இந்தியாவில் பல பிரபல கோவில்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு நிலை ஏற்பட்டதையடுத்து, காளகஸ்தி கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை திறக்கப்பட்டு குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் தினம்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தற்போது இதுகுறித்து தேவஸ்தான தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் பக்தர்களால் ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை என்பதால், பக்தர்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.