IT துறையின் வளர்ச்சிக்கு திமுக தான் முக்கிய காரணம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவரை ஆதரித்து சோழிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் நேற்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக ஆட்சியில் சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவந்தோம். இங்கு மோனோ ரெயில் திட்டம் தான் வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்னார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன? பிரதமரை அழைத்து விழா நடத்துகிறீர்களே? இந்த திட்டம் யார் கொண்டுவந்த திட்டம்? நந்தம்பாக்கத்தில் இந்திய வர்த்தக மையம், கண்ணாடி தொழிற்சாலை உள்பட 100-க்கும் அதிகமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. டைடல் பார்க்கை உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி தான். ஐ.டி. துறை வளர்ச்சிக்கு தி.மு.க. தான் முக்கிய காரணம் என்று ஸ்டாலின் பேசினார்.