ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கூறினார் ஆனால் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.
இந்தியாவில் 2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரில் ஒருவராக ஷாருக் கான் இருந்தார். இப்பொழுது வரை அவர்தான் இருந்து வருகிறார். சவுரவ் கங்குலிக்குப் பிறகு கவுதம் கம்பிர் நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் இருக்கும் போது இரண்டு முறை கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது பற்றி கம்பிர் அளித்த பேட்டியில் ‘‘ஷாருக் கான் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதி கொடுத்தார் ’’ என்றார். இவர் கூறியதை அறிந்த சவுரவ் கங்குலி, தனக்கு அப்படி ஒன்றும் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறும்போது , ‘‘கொல்கத்தா அணியை ஐபிஎல் போட்டிகளில் நிர்வகிக்க முழு சுதந்திரம் கொடுப்பதாக ஷாருக் கான் உறுதியளித்து இருந்தார். ஆனால் அப்படி எந்தவொரு சுதந்திரமும் அளிக்கப்படவில்லை. அணியில் ஒருவரை தேர்வு செய்யும் போது பிறரின் தலையீடல் இருந்தது. ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் அந்த அணியின் கேப்டன் சார்பில் விட வேண்டும். எடுத்துக்காட்டாக சென்னை அணியை டோனி நிர்வகிக்கிறார். இதேபோல தான் மும்பையும் உள்ளது. அங்கு ரோகித் ஷர்மாவிடம் யாரை அணியில் சேர்க்க வேண்டும் என்று யாரும் கட்டளையிடுவதில்லை ’’ என்று கூறியுள்ளார்.
கங்குலியின் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிக பெரிய தோல்வியை அடைந்தது. ஒருதடவை நூறு ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது. இதனால் கங்குலியின் மேல் இருந்த நம்பிக்கையில் கலங்கம் வந்தது. அவர் தலைமையில் இருந்த கொல்கத்தா அணி 27 போட்டிகளில் 13 போட்டிகளில் மட்டுமே வென்றது. இதையடுத்து 2011-ம் வருடம் ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கங்குலி விளக்கப்பட்டு வெளியேறினார். அதன்பின்னர் கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி செயல்பட்டு 7 வருடம் விளையாடி 2 முறை கோப்பைகளையும் அந்த அணி வென்றுள்ளது.