சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ நாளை முதல் விசாரிக்க இருக்கின்றது.
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐயின் சிறப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலமாக தமிழகம் வந்து விசாரணை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் கைது செய்யப்பட்டவர்களை, கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பதை தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரித்தது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக பட்டியல் இடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தது இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தலைமை காவலர் முருகன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர் ரேவதி உட்பட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனுவையும் தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் தற்போது வரை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க படவில்லை என்ற கருத்து தெரிவித்திருந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூலை 7ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நகல் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து தமிழகம் வந்து விசாரணைக்கு வருகின்றார்கள். இதற்க்கு தேவையான வசதிகளை செய்து தர தமிழக அரசிடம் கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார். இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிபிசிஐடி கைது செய்யப்பட்டவர்களை கைது செய்யப்பட்டது முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி தரப்பில் விசாரணை தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையையும், சிபிஐ தரப்பில் இடைக்கால விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.