தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மக்கள் தளர்வுகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர். இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலும்,பாதிப்பின் அளவை பொருத்து ஊரடங்கை தீவிரப்படுத்த மாவட்ட அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால், குறிப்பாக கம்பம் பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் ஜூலை 12ம் தேதி முதல் 25-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் காவல்துறை மற்றும் வணிகர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.