Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கலர் சட்டையில் வாகன சோதனை…. நிற்காமல் சென்ற இளைஞர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ….!!

திருநெல்வேலி அருகே சீருடை கூட அணியாத காவலர்கள் இளைஞரை வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் சீருடை கூட அணியாமல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை கலர் சட்டையில் இருந்த காவலர்கள் வழிமறித்து வாகனத்தை நிறுத்த வலியுறுத்திய போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காவலர்கள், காரில் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்திய போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த 2 பேர் தப்பி ஓடினர்.

மாட்டிக் கொண்ட ஒரு வாலிபரை பிடித்து வாகனத்தை நிறுத்தச் சொன்னால் நிறுத்தாமல் செல்வாயா என்று கூறிக்கொண்டிருக்கும் போதே சப்-இன்ஸ்பெக்டர் வாலிபரை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து கலர் சட்டையில் இருப்பவர்களை காவல்துறை அதிகாரிகள் என்று நம்பாமல் இளைஞரும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இதையடுத்து மற்றொரு காவலர் காரிலிருந்து லத்தியை எடுத்துக்கொண்டு இளைஞரை தாக்க முற்பட்ட போது அங்கிருந்த மக்கள் தங்களது செல்போன் மூலம் படம் பிடித்து தொடங்கியுள்ளனர்.

இதைக் கண்ட காவலர்கள் சுதாரித்து இளைஞரை எச்சரித்து செல்வதுபோல் அவரை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். விட்டுச் செல்லும் முன் அவர்கள் மிரட்டியதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். பின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை திருநெல்வேலியின் போலீஸ் சூப்பிரண்ட் நேரில் அழைத்து விசாரித்துள்ளார். குறிப்பாக இளைஞரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் திருமணத்திற்காக விடுப்பு எடுத்துச் சென்றதால், அவரை மட்டும் விசாரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |