திருப்பதி கோவிலில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊராடங்கில் கடந்த மே மாதம் இறுதி வரை பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததை அடுத்து, ஜூன் மாதத்திற்கு பிறகு பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.
அந்த வகையில், பிரபல கோவில்கள் அனைத்திலும் வழிபாடுகளை தொடங்க மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, திருப்பதி கோவிலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டும் அனுமதியுடன் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாள் தோறும் பக்தர்கள் வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.