மகன் ஒருவர் பெற்றோருடன் சேர மூன்று மாதங்கள் சிறிய படகில் கடலில் பயணம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் என்பவர் போர்ச்சுக்கல் சென்றிருந்த சமயம் கொரோனா தொற்றி பரவலின் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்படியாவது அர்ஜெண்டினாவில் இருக்கும் தனது பெற்றோருடன் சேர ஜுவான் முடிவு செய்தார். அதற்காக படகு ஒன்றை எடுத்துக்கொண்டு தனியாக கடலில் பயணத்தை மேற்கொண்டார். 24 மணி நேரத்தில் தன் நாட்டை அடைந்து விடலாம் என்று எண்ணிய ஜுவானுக்கு பல தடைகள் காத்திருந்தது என்பது போகப்போக அவருக்கு தெரிந்தது.
தான் சேமித்து வைத்திருந்த 200 யூரோக்கள், 160 கேன் உணவு, ஒரு மதுபான பாட்டிலுடன் புறப்பட்ட ஜுவான் பல அபாயங்களை வழியில் சந்தித்துள்ளார். விடாமல் துரத்திய கடல் கொள்ளையர்கள், படகை கவிழ்க்க முயற்சித்த ராட்சத அலை போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் தாண்டி அவர் சொந்த நாட்டிற்கு வந்தபோது 85 நாட்கள் கடந்து இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் அதிக நாட்கள் நீடிக்கும் என்று தெரிந்தே எப்பாடுபட்டாவது தனது குடும்பத்தினருடன் சேர்ந்து விட வேண்டும் என விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
3 மாதங்களுக்குப் பிறகு தனது நாட்டை வந்தடைந்த ஜூவான் இன்னும் 15 நாட்கள் தன் தந்தை கார்லோஸ் மற்றும் தாய் நிலடை சந்திக்க காத்திருக்க வேண்டியது அவசியம். காரணம் அவர் நாட்டில் கொரோனா இல்லை என்றாலும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் 15 நாட்கள் பிறகு பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்படுவார். இதனால் மகனும் பெற்றோரும் தினமும் அதிக நேரம் தொலைபேசியில் உரையாடி வருகின்றனர். இவரது செயல் பலரது மனதில் இந்த காலத்தில் இப்படி ஒரு மகனா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது