ஆண்டிமடம் அருகே கல்யாணம் செய்து வைக்காத ஒரே காரணத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி.. இவருக்கு வயது 70 ஆகிறது.. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர்.. இதில் மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்.. இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சக்கரவர்த்தியால் முடியவில்லை.
இதில் வெல்டிங் வேலை பார்த்து வரும் 3ஆவது மகன் கலியமூர்த்தி(36) திருமணமாகாத விரக்தியால், வேலை செய்து கிடைக்கும் பணத்தை வைத்து குடித்து விட்டு போதையில் தனக்கு கல்யாணம் செய்து வைக்குமாறு தந்தை சக்கரவர்த்தியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலியமூர்த்தி வெளியில் சென்று விட்டு மது போதையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, திண்ணையில் படுத்து உறங்கி கொண் டிருந்த சக்கரவர்த்தியை எழுப்பி கல்யாணம் செய்து வைக்குமாறு வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது.. இதனால் கடும் கோபமடைந்த கலியமூர்த்தி அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகயிருந்த கலியமூர்த்தியை நேற்று கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையிலடைத்தனர்.