சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை எடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது.
தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு அதிமுக அரசுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் இந்த சம்பவம் தொடர்பாக மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது பல்வேறு தரப்பினருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் திரு.ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்குப் போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தபட்டனர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.
இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசு இந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு வருகின்ற போது இதை தெரிவித்து நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் முதல்வர் தெரிவித்தார்.