கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் முதல்முறையாக 3000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 70,977ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனோவால் 911 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 39,999 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 47,650 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜுன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் 30ம் தேதியுடன் பொதுமுடக்கம் முடியும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இந்த ஆலோசனையானது நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீடிப்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.