நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை பிரிந்த ரோஸ்லின் குழந்தை அபிஷாவுடன் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள வீரவநல்லூரில் வசித்து வந்துள்ளார்..
இதனிடையே போதிய வருமானம் இல்லாததால் வறுமை காரணமாக ரோஸ்லின், தன்னுடைய உறவினரான சேரன்மாதேவி முடுக்கு தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ் (30) என்பவர் மூலம் குழந்தையை விற்பதற்கு முடிவு செய்தார்..
அதன்படி, கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (வயது 39) என்பவரிடம் பாபநாசம் கோவில் அருகில் வைத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ரோஸ்லின் தன்னுடைய குழந்தையை விற்றுள்ளார்.. தொடர்ந்து பல்வேறு புரோக்கர்கள் கைக்கு சென்ற அந்த குழந்தை இப்போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாஜூதீன் மனைவி பரக்கத் நிஷா (வயது 25) என்பவரிடம் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரவநல்லூர் திரும்பிய கணபதி, தன்னுடைய குழந்தையை பற்றி மனைவி ரோஸ்லினிடம் கேட்டுள்ளார்.. அதற்கு ரோஸ்லின், குழந்தையை யாரோ ஒருவர் திருடிச் சென்று விட்டதாக கூற, இதை ஏற்க மறுத்த கணபதி இதுபற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்குமாறு கூறினார்.. அதன்பேரில் வீரவநல்லூர் ஸ்டேஷனில் ரோஸ்லின் புகார் கொடுத்தார்..
ஆனால், ரோஸ்லின் நடவடிக்கையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது . இதையடுத்து அவரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.. இந்த விசாரணையில், பெற்ற குழந்தையை பணத்துக்காக விற்றதை அவர் ஒப்புக்கொண்டார்..
இந்த சம்பவத்தில் தொடர்பாக சேரன்மாதேவியைச் சேர்ந்த சுரேஷ், பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த குமார், வெள்ளாங்குழியைச் சேர்ந்த சாமிநாதன் மனைவி மூக்கம்மாள் (வயது 40), விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த மரிய பாக்கியசாமி மகன் கண்ணன் (வயது 38), திருமங்கலத்தை சேர்ந்த பரக்கத் நிஷா மற்றும் குழந்தையின் தாய் ரோஸ்லின் ஆகிய 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.