பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை ரூ 2 லட்சம் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் காப்பற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்தவர் கிளாஸ்டிஸ் கீதா.. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. அறுவை சிகிச்சைக்கு அடுத்தநாள் வயிற்றில் இருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார்.
இதையடுத்து அந்த பெண் , புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. 96% இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் செறிவு 84% மட்டுமே இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கினர்.
5 நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு பிறகு 50% செயற்கை சுவாசம் குறைக்கப்பட்டது. நேற்று (ஜூன் 23) பூரண குணமடைந்த கிளாஸ்டிஸ் கீதா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், தனக்குச் சிகிச்சையளித்துக் காப்பற்றிய மருத்துவக் குழுவினருக்கு கீதா நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர், “சுயநினைவை இழந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதென்பது எப்பொழுதும் சவாலானது.. மருத்துவப் பேராசிரியர் பாலமுருகன், மகப்பேறு பேராசிரியர் ராமதாஸ், மார்பக நோய் வல்லுநர் தாமோதரன், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து போராடியதன் விளைவாக கீதா காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதன்மூலம் டாக்டர்கள் ஒரு குடும்பத்தில் ஒளியேற்றியுள்ளனர். மேலும் இந்தச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ 2 லட்சம் வரை செலவாகும்” என்றார்.