Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது…. புதிய யுக்தியால் அசத்தும் கிராம மக்கள்…!!

வாட்ஸ்அப் குழு உருவாக்கி வெளியூரிலிருந்து வருபவர்களை  கண்காணித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்

கோவை மாவட்டம் கடந்த மாதத்தின் இறுதி வரை கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் விமானம் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்ட பிறகு நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மூலமே தொற்று பரவல் அதிகரிப்பதாக தெரிய வருகின்றது. வெளியூரிலிருந்து யாரேனும் வந்தால் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஒன்று. ஆனால் சிலர் பிரதான சாலை வழியாக வராமல் கிராமப்புறம் வழியாக வந்துவிடுகின்றனர். அதிகாரிகளுக்கு தகவல் கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதனால் யார் வருகிறார்கள் என்பது தெரியாமல் உள்ளனர். இந்நிலையில் கோவை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரையான்பாளையம் மற்றும் மயிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புதிதாக வருபவர்களை கண்காணிக்க வாட்ஸ்அப் குழு ஒன்று உருவாக்கியுள்ளனர். 250 பேர் அடங்கிய குழு குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்திரசேகரன் கூறியபோது, “கரையான்பாளையம் மற்றும்  மயிலம்பட்டி பகுதியில் 1500க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் யார் புதிதாக வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பது தெரியாது. சில தினங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் பற்றிய தகவல் இந்த வாட்ஸப் குழுவில் பரிமாறப்பட்டது.

இதன் மூலம் புதிதாக எங்கள் ஊருக்கு வருபவர்கள் பற்றிய தகவலை உடனுக்குடன் ஊராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்க உதவி செய்து வருகின்றோம். இது மட்டுமன்றி கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களும் இந்த குழுவில் பரிமாறுகின்றோம். தொடங்கப்பட்ட இந்த குழுவில் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள், இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இணைந்துள்ளனர். வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறார்களா என்பதையும் கண்காணித்து தகவல் தெரிவிக்கின்றனர். அவர்கள் வெளியே சென்றால் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளித்து விடுகின்றோம்” என கூறினார்.

Categories

Tech |