இன்றைய பல காதல் திரைப்படங்களின் தலைப்புகளாய் மாறியது கண்ணதாசனின் பாடல்வரிகள்.
ஆரம்பத்தில் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் விமர்சனம் செய்வதற்காக கம்பராமாயணத்தை படிக்கத் துவங்கி அதில் லயித்துப் போய் கடவுளை ஆராயத் தொடங்கினார்.
பாடல் எழுதும் ஊக்கத்தை கம்பராமாயணத்தில் இருந்து தான் பெற்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் பல வார்த்தைகளுக்கு தனி கௌரவம் கொடுத்தவர் கண்ணதாசன்.
‘கண்ணே கலைமானே’ என்ற பாடலே கவிஞரின் கடைசி வரிகள் என பலரும் எண்ணுகிறார்கள் ஆனால் ‘தேவன் தந்த வீணை’ பாடலே அவருடைய கடைசி பாடல் வரிகள்.
‘இசையினிலே எனை மறந்தேன், இறைவன் சபையில் கலைஞன் நான்’ என்று அந்தப் பாடலில் தனது கடைசிப் பாடல் வரிகளை எழுதி முடித்தபோது திரை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கவிதை வரிகளை எழுதும் போதும் சொல்லும் போதும் தனது காலணிகளை கழற்றி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் கவிஞர் கண்ணதாசன்.
தான் மரணம் அடைந்துவிட்டதாக இவரே செய்தியை பரப்பிவிட்டு, பின்னர் சிரித்தபடி அனைவரது முன்பும் தோன்றினார். அக்டோபர் 17 1981 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த சமயம் மறுபடியும் அதே நிகழ்வு நடக்காதா என்று அனைவரும் எண்ணினர்.
திரையுலக கம்பனாய், தமிழை மேலும் அழகாக்கி, காலத்தை வென்ற கவிஞனாய் இருக்கும் கண்ணதாசன் ஒரு தமிழ் காவியம் என்றே கூறலாம்.
தமிழர்களின் உணர்வுகளிலும் கனவுகளிலும் இன்றளவும் கலந்து இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.