வேலூர் செல்லியம்மன் கோவிலில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.. அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்..
அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி இருக்கும் 14 வயது சிறுமிக்கும், போளூரை சேர்ந்த 24 வயதுடைய இளைஞருக்கும் வரும் 24ஆம் தேதி வேலூர் செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு நடந்து வருவது தெரிய வந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில், பெங்களூருவில் தாயுடன் வசித்து வந்த சிறுமி 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.. தந்தை இல்லாததால் மாணவிக்கு உடனே உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தாயார் முடிவு செய்துள்ளார்.. அதனால் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பே மகளை அழைத்து கொண்டு சத்துவாச்சாரியிலுள்ள அவருடைய தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.. கடந்த மாதம் போளூரில் வைத்து சிறுமிக்கு திருமணம் நடத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.
இதனையறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.. மேலும் இனிமேல் இப்படி செய்தால் புகாரளித்துவிடுவோம் என மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.. கொரோனா தொற்று அச்சம் காரணமாக மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்படவில்லை.
இந்நிலையில் வருகிற 24ஆம் தேதி வேலூர் செல்லியம்மன் கோவிலில் திருமணம் நடத்துவதற்கு இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்தனர்.. மாப்பிள்ளை உட்பட மணமகன் வீட்டாரை வேலூருக்கு பேருந்து மூலம் வரவழைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த திருமணத்தில் மாணவிக்கு சிறிதும் விருப்பமில்லை.. அவர் தொடர்ந்து படிக்கவேண்டும் என்று விரும்பியுள்ளார். அதனால் மாணவி தன்னுடைய உறவினர் மூலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து சமூகநல அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த மாணவியின் தாயாரை அழைத்து 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம்.. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். ஆனாலும் மாணவியின் தாயார் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் உறுதியாகவே இருந்தார்.. இதையடுத்து சமூகநல அலுவலர்கள், சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தும் விதமாக மாணவியை உடனடியாக மீட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அரியூர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.