சங்கர் ஆணவ கொலை வழக்கில் தநதையை விடுதலை செய்ததை எதிர்த்து கவுசல்யா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கின்றார்.
உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்த சங்கர் – கவுசல்யா தம்பதியை கவுசல்யா தந்தை, தாய், மாமனார் கூலிப்படையை ஏவி விட்டு ஆணவப்படுகொலை செய்தனர். இதில் தந்தை உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியமைத்தது . முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தையை வழக்கில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்ததோடு மரண தண்டனை வாங்கியவர்களுக்கு ஆயுள்தண்டனையாக மாற்றியது.
இந்த உத்தரவுக்கு பலரும் அதிருப்தி தெரிவித்த நிலையில் தந்தை விடுவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கவுசல்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நீதிமன்றத்தை மதிக்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு எனக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஒன்று சேர கொடுத்துள்ளது. முதலில் அன்னலட்சுமி விடுதலை செய்யப்பட்டார். இப்போது சின்னசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அன்னலட்சுமி உள்ளிட்டவர்களுக்கான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அவசரமாக, இந்த காலத்துலத்தில் தீர்ப்பை வழங்க வேண்டிய அவசியமென்ன ? சமூகம் பெரும்பாலும் முடங்கியுள்ள இந்த சூழலில் தீர்ப்பை வழங்கி இருக்கிறது எனக்கு நிறைய கேள்விகளை எழுப்புகின்றது. அதேபோல வழக்கை அரசு முனைப்போடு, அக்கறையோடு கையிலெடுக்கு என நம்புகின்றேன்.
திருப்பூர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற காலங்களிலும் என்னுடைய அரசு தரப்பு கொண்டிருந்த தொடர்பு பெருத்த வேறுபாடாக உள்ளது. ஆனால் இன்னும் நீதிமன்றத்தில் மேல நம்பிக்கை உள்ளது. என்னுடைய சட்டப் போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு தமிழக அரசால் கொண்டு செல்லப்படும் என்று நான் நம்புகின்றேன். உரிய சட்ட கலந்தாய்வு செய்து, இன்னும் வேகமா என்னுடைய சட்ட போராட்டத்தை தொடருவேன். குறிப்பாக சின்னசாமி – அன்னலட்சுமி தண்டனை பெற வேண்டும். அதுதான் சங்கருக்குரிய நீதி… அது கிடைக்கும்வரை என்னுடைய போராட்டம் தொடரும் என்று கவுசல்யா தெரிவித்தார்.