‘முதல்வர் விருது’ உளவுத்துறை டிஐஜி கண்ணன், எஸ்பிக்கள் மேகேஷ், அரவிந்த் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, டிஎஸ்பி பண்டரிநாதன், காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதிகளை கைது செய்ததற்காகவும் காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, வில்சனை சுட்டுக்கொன்ற அப்துல் தமீம், தவுசிக் ஆகிய இரண்டு தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் தங்கியிருந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில், அல்ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பு தமிழகத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் நடத்துவதற்காக திட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகள் சார்பில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிப்படையில் இடம்பெற்ற 5 பேருக்கு, தீவிரவாதிகளை கைது செய்ததற்காக விருதுகள் வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.