லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ராணுவ உள்வட்டாரத் தகவல் வந்துள்ளது. அதேபோல சீன ராணுவத் தரப்பிலும் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
லடாக் எல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் மூண்டது. இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இருநாட்டு வீரர்களுக்கிடையே மோதல் மூண்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை பிரதமர் மோடி தற்போது நடத்தி வருகிறார்.