கேரளாவில் உள்ள கோயில்களில் பக்தர்கள் வழிபட இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கோயில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முதன் முதலாக கேரளாவில் தான் கொரோனா தாக்கம் அதிகரித்து இருந்தது. பின்னர், கேரளா அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருந்தது.
அதன் பிறகு, பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து தங்களது மாநிலத்திற்கு திரும்பியவர்கள் மூலம் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் இதுவரை 1,324 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே, 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது மத்திய அரசு கோயில்களை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. அதன்படி, கேரளா உள்பட பல மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தால் கேரள அரசு கோயில்களில் பக்தர்கள் வர அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.